நாகப்பட்டினம்: நாகை வெள்ளிப்பாளையத்தில் பாஜக மாவட்ட அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்துக்கான மின் கட்டணத்தை பாஜகவினர் கடந்த சில மாதங்களாக செலுத்தாமல் இருந்துள்ளனர். இதனால், மின்வாரிய ஊழியர்கள் பாஜக அலுவலகத்தின் மின் இணைப்பைத் துண்டித்துள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த பாஜகவினர், பாஜக மாநிலச் செயலாளர் வரதராஜன், நாகை மாவட்டத் தலைவர் நேதாஜி தலைமையில் வெள்ளிப்பாளையம் துணை மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு அங்கிருந்த அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், மின் இணைப்பைத் துண்டித்த ஊழியர் பாஜகவினரை ஒருமையில் பேசியதாகவும் குற்றஞ்சாட்டினர்.
இதைத்தொடர்ந்து அங்கிருந்த மின் பகிர்மான மேற்பார்வையாளர் பாஜகவினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பேச்சுவார்த்தையில், மின் இணைப்பைத் துண்டித்த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க பாஜகவினர் வலியுறுத்தினர். மின்கட்டணத்தை விரைந்து செலுத்த பாஜகவினரைக் கேட்டுக்கொண்ட அலுவலர்கள், ஊழியர் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனர். மின் வாரிய அலுவலகம் முன்பு பாஜகவினர் நடத்திய இப்போராட்டத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: திமுகவின் பொய் பரப்புரையை மக்கள் நம்பவில்லை: ஹெச்.ராஜா