நாகை மாவட்டம் பொரவச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது பைசான். இவர் மாட்டிறைச்சி சாப்பிட்டு முகநூலில் பதிவிட்ட காரணத்திற்காக தாக்கப்பட்டு, நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், இந்த கொடூரத் தாக்குதலை நிகழ்த்திய அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார், மோகன்குமார், கணேஷ்குமார், அகஸ்தியன் உள்ளிட்டோரை கீழ்வேளூர் காவல்துறையினர் கைது செய்து அவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர்.
இதனைத்தொடர்ந்து, தாக்குதலில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்டோரை பாரபட்சமின்றி கைது செய்ய வலியுறுத்தி நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜசேகரிடம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனித நேய மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் புகார் மனு அளித்தனர்.
மேலும், சம்பந்தப்பட்ட நபர்களை விரைந்து கைது செய்யவும் இது போன்று கலவரத்தை தூண்டும் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் வலியுறுத்தினர்.