நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக பிரதான தொழிலாக திகழ்வது மீன்பிடி தொழிலாகும். மீன்பிடி தொழிலில் சிறந்து விளங்கும் கிராமங்களில் ஒன்றான செருதூர் மீனவர்கள் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட பைபர் படகு வைத்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
இவர்கள் பிடித்து வரும் மீன்களை வெள்ளாற்றில் உள்ள மீன்பிடி இறங்குதளத்தில் படகுகளை நிறுத்தி மீன்களை விற்பனை செய்து வருகின்றனர். 300-க்கும் மேற்பட்ட படகுகள் நாள்தோறும் சென்று வரும் வெள்ளை ஆற்றின் முகத்துவாரத்தில் மணல் திட்டுகள் உருவாகி அடிக்கடி கரை திரும்பும் படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி வருகிறது.
விபத்தை தடுக்க...
இதனால், உயிரிழப்புக்கள் ஏற்படுவதோடு மிகப்பெரிய பொருள் சேதமும் ஏற்பட்டு வந்தது. இதனையடுத்து, மீனவர்கள் கோரிக்கை ஏற்று மீன்வளத்துறை மூலமாக சுமார் 4 கோடி ரூபாய் செலவில் ஆற்றின் முகத்துவாரத்தை தூர்வாரும் ராட்சத எந்திரமான டிரெஸ்ஸிங் எந்திரம் மூலமாக ஆழப்படுத்தும் பணி கடந்த கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்டது.
ஆறுமாதத்தில் முடிவடைய வேண்டிய தூர்வாரும் பணி கரோனா ஊரடங்கு காரணமாக கால தாமதம் ஏற்பட்டுள்ளது. கடல் முகத்துவாரத்தில் இருந்து 900 மீட்டர் நீளத்திற்கு மூன்று அடி ஆழத்திற்கு ஒரு லட்சத்து 64 ஆயிரம் கன அடி மணலை அள்ளும் பணியில் தனியார் நிறுவனம் தற்போது ஈடுபட்டு வருகிறது.
ஓரிரு நாள்களில் நிறைவு
இன்னும் சில மாதங்களில் பருவமழை தொடங்க இருப்பதால் தமிழ்நாடு அரசு விரைந்து தூர்வாரும் பணியை முடிக்க வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மீன்வளத்துறை அலுவலர்களிடம் விசாரித்தபோது,'கரோனா நோய்த்தொற்று காரணமாக தூர்வாரும் பணி கால தாமதம் ஏற்பட்டது. தற்போது, 80 சதவீதத்திற்கு மேல் தூர்வாரும் பணிகள் நிறைவடைந்து விட்டது. ஓரிரு நாள்களில் அனைத்து பணிகளும் நிறைவடையும்' என தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: நாளை முதல் தமிழ்நாடு முழுவதும் பேருந்துகள் இயக்கம்