நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் கரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவால் நலிவடைந்த கூறைநாடு பருத்தி மற்றும் பட்டு கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு உற்பத்தி விற்பனை சங்கத்திரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், கைத்தறி நெசவாளர்கள் மற்றும் அப்பகுதி துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "100க்கும் மேற்பட்ட தறிகள் இயங்கி வந்த கூறைநாடு பருத்தி மற்றும் பட்டு கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு உற்பத்தி விற்பனை சங்கம் தற்போது நலிவடைந்து மிக குறைந்த அளவிலேயே செயல்பட்டு வருகிறது. கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சொந்த மாவட்டத்திலேயே நெசவாளர்கள் நலிவடைந்து ஈரத்துணியை வயிற்றில் கட்டிக்கொண்டு வாழ்க்கை நடத்துகின்றனர். நெசவாளர்களுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மாதம் 5 ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். நலிவடைந்துள்ள நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை மறுசீரமைப்பு செய்வதற்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்" எனவும் அவர் அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: குடிசைப் பகுதி மக்களுக்கு இலவச முகக் கவசம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி