நாகை மாவட்டத்தில், கடந்த ஜனவரி முதல் 250க்கும் மேற்பட்ட நெல் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வெளிமாவட்டங்களில் இருந்து இங்கு நெல் நேரடி கொள்முதல் செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகத்தினருக்குத் தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் ஆட்சியரின் உத்தரவின்பேரில், நாகை மாவட்ட நுகர்பொருள் வாணிபக் கழக முதன்மை மண்டல மேலாளர் சண்முகநாதன் தலைமையில் ரோந்து பணியில் அலுவலர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மயிலாடுதுறை அருகே திருமங்கலம் கிராமத்தில் இயங்கிவரும் நேரடி கொள்முதல் நிலையத்திற்கு வந்த இரண்டு லாரிகளை அலுவலர்கள் சோதனை செய்தனர்.
அப்போது ஒரு லாரியில் 350 நெல் மூட்டைகளும், மற்றொரு லாரியில் 220 நெல் மூட்டைகளும் இருந்தன. உடனே அலுவலர்கள் மொத்தமாக லாரியில் இருந்த 570 நெல் மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.
மேலும், இதுபோன்ற வெளிமாவட்டங்களில் இருந்து வரும் நெல்லை நேரடி கொள்முதல் செய்யக்கூடாது என மாவட்ட அலுவலர்கள் அதன் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க: இனி நெல்கொள்முதல் மையங்களில் விவசாயிகளிடம் கூடுதல் பணம் கேட்டால் பணிநீக்கம் உறுதி!