கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 21 நாள் ஊரடங்கு உத்தரவு நேற்று (மார்ச் 24) முதல் அமலுக்கு வந்தது. இதனால் அத்தியாவசிய கடைகள் தவிர பிற கடைகள் மூடப்பட்டன. இதைத் தொடர்ந்து, நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சியில் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் உணவு கிடைக்காமல் தவித்த ஆதரவற்ற முதியோருக்கு பல்வேறு தன்னார்வ அமைப்பினர் உணவு வழங்கி சேவை பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மயிலாடுதுறை நகராட்சி சார்பில் ஆதரவற்றோருக்கான சமுதாய சமையல்கூடம் அமைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு வருகிறது. தனியார் திருமண மண்டபத்தில் சமைத்து மயிலாடுதுறை பேருந்து நிலையம், ரயில் நிலைய வாயில் உள்ளிட்ட இடங்களில் வாழ்ந்து வரும் ஆதரவற்ற முதியோருக்கு நகராட்சி ஆணையர் அண்ணாமலை தலைமையில் அலுவலர்கள் மதிய உணவுகளை வழங்கினர்.
உணவு தயாரிக்கும் பணியை மண்டல கண்காணிப்பு அலுவலர் அம்பிகாபதி நேரில் ஆய்வு செய்தார். ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள அனைத்து நாட்களுக்கும் நகராட்சியின் சமுதாய சமையல் கூடம் மூலம் காலை, மதியம், இரவு உணவுகள் தயார் செய்யப்பட்டு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சுகாதாரத் துறை அலுவலர்களுக்கு 4 மாத ஊதியம் முன்பே வழங்கப்படும் - ஒடிசா முதலமைச்சர்