கரோனா ஊரடங்கு உத்தரவால் மீனவர்கள் பலர் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லாமல் வாழ்வாதாரம் இழந்துவந்தனர். பின்னர், மத்திய அரசு பைபர் படகுகளின் மூலம் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடிக்கலாம் என அனுமதியளித்ததை அடுத்து இரண்டு நாள்களுக்கு ஒருமுறை மீனவர்கள் தற்போது மீன் பிடிக்கச் சென்றுவருகின்றனர்.
இந்த மீன்களை நாகை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவப் பெண்கள் கூடைகளில் வைத்து தெருக்கள்தோறும் விற்பனை செய்துவருகின்றனர்.
இந்நிலையில், காவல் துறையினர் மீன் விற்பனைசெய்யும் தங்களைக் கண்டித்து அடித்துவிரட்டுவதாகவும், மீன்வளத் துறை அலுவலர்கள் மீன் விற்பனைக்கு உரிய அனுமதிச்சீட்டு வழங்காமல் அலட்சியப்படுத்துவதாகவும் இதனால் மீன் விற்பனை செய்யமுடியாமல் தங்களது குடும்பம் வறுமையில் வாடுவதாகவும் மீனவப் பெண்கள் குற்றஞ்சாட்டினர்.
இதையடுத்து, திருமுல்லைவாசல் மீனவப் பெண்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மீன் விற்பனையை தடைசெய்யும் சீர்காழி காவல் துறையையும், மீன் விற்பனைக்கு உரிய அனுமதிச்சீட்டு வழங்காத மீன்வளத் துறை அலுவலர்களையும் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
மேலும், தற்போது மீன்பிடித் தடைக்காலம் என்பதால் பைபர் படகுகள் மட்டுமே மீன்பிடிக்கச் சென்றுவருவதாகவும், விசைப்படகு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் அரசு அறிவித்துள்ள ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியை ஐந்தாயிரமாக உயர்த்தி அளிக்குமாறும் கோரிக்கைவிடுத்தனர்.
இதையும் பார்க்க:வறுமையில் வாடும் 3500 மீனவக் குடும்பங்கள் - கண்டுகொள்ளுமா அரசு?