நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த மணல்மேடு அருகே தலைஞாயிறு காட்டுத்தெரு பகுதியில் சுமார் நூறு ஏக்கர் நிலத்தடி நீரைக்கொண்டு குறுவை சாகுபடி விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. நிலத்தை தயார் செய்து விதைவிட்டும் விவசாயிகள் நடவும் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் மின்மாற்றி வெடித்து பழுதானது. அதை மின்வாரியத் துறையினர் கழற்றிச்சென்று பழுதை சரி செய்து கொண்டுவந்து மாட்டினர். ஆனால் தொடர்ந்து மூன்று முறை மின்மாற்றி பழுதானது. இதனால் மின்மாற்றியை சரிசெய்வதற்காக ஒவ்வொரு முறையும் போர்செட் வைத்திருக்கும் 25 விவசாயிகள் தலா ஆயிரம் ரூபாய் வசூல் செய்து மின்வாரிய ஊழியர்கள் மூலம் பழுதை சரி செய்தனர்.
ஆனால் மீண்டும் நான்காவது முறையாக மின்மாற்றி பழுதானதால் கடந்த நான்கு நாட்களாக நட்ட பயிர்கள் தண்ணீரின்றி காய்ந்து கருகிவருகிறது.
நாற்று பறிக்க வேண்டியவைகள் கருகாமல் இருக்க கை பம்பு மூலம் விவசாயிகள் தண்ணீர் ஊற்றி வருகின்றனர். தொடர்ந்து நட்ட வயல் காய்ந்து வெடித்து வருகிறது. தண்ணீர் இல்லாததால் நடவு பணிகளை விவசாயிகள் நிறுத்தி வைத்துள்ளனர். மின்சாரவாரியத் துறை அலட்சியத்தால் 25 விவசாய குடும்பங்கள் இயற்கை பேரிடர்கள் இல்லாமலேயே விவசாயத்தை இழந்து தவித்து வருகின்றனர். மின்மாற்றியை மாற்றி தரக்கோரி மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயரிடம் விவசாயிகள் மனு அளித்துள்ளனர்.
உடனடியாக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து புதிய மின்மாற்றி தொடர் வைத்தால் மீண்டும் குறுவை நடவு செய்ய ஏதுவாக இருக்கும் என்று அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மின்வாரியத் துறை அலுவலர்கள் கூறுகையில், "மின்மாற்றி மீண்டும் மீண்டும் பழுதடைவதால் இரண்டு தினங்களில் புதிதாக மின்மாற்றி மாற்றப்படும்" எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஊரடங்கால் முடங்கியது காளான் விவசாயம்