2019-20-ஆம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டுத் தொகையில் மோசடி நடைபெற்றுள்ளதாக காவிரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
நாகை மாவட்டத்தில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் 4,09,180 விவசாயிகள் ஒரு ஹெக்டேருக்கு ரூ.1,148 வீதம் 1,39,259 ஹெக்டேருக்கு பிரிமியம் செலுத்தியுள்ளனர். ஒரு ஹெக்டேருக்கு விவசாயி கட்டுவது ரூ.1,148 ஆகும். அதற்கு மத்திய - மாநில அரசுகள் சரிசமமாகக் கட்டும் தொகை ரூ.28,522 என சேர்த்து மொத்தமாக ரூ.29,670 கட்டுகிறது. ஒரு ஹெக்டேருக்கு ரூ.76 ஆயிரத்திற்கு காப்பீடு செய்ய ரூ.29,670 செலுத்தப்படுகிறது.
![nagai farmers request union govt to conduct cbi inquiry in agri crop insurance scam](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-ngp-08a-crop-insurance-mosadi-script-tn10023mp4_21092020203357_2109f_1600700637_646.jpg)
நாகை மாவட்டத்தில் உள்ள ஒட்டுமொத்த விவசாயிகளும் மத்திய - மாநில அரசுகளும் சேர்ந்து பயிர் காப்பீட்டிற்காக கட்டிய பிரிமியத் தொகை ரூ.413.19 கோடியாகும். பயிர் காப்பீடு செய்த தொகை ரூ.1000 கோடியாகும். இந்த ஆண்டு பயிர் காப்பீட்டு நிறுவனம் விவசாயிகளுக்கு அளித்த பயிர் காப்பீடு இழப்புத் தொகை ரூ.68 கோடி மட்டுமே. பயிர் காப்பீட்டு நிறுவனம் தங்களிடமே வைத்துக் கொண்ட தொகை மட்டும் ரூ.345 கோடியாகும் மேலும் இந்தத் தொகையில் அரசியல்வாதிகள், அலுவலர்களுக்குப் பங்கு போயுள்ளதாகவும் விவசாய சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இது குறித்து காவிரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்க தலைவர் குருகோபிகணேசன் கூறுகையில், "பயிர் காப்பீடு நிறுவனமானது ஆரம்பத்திலிருந்தே விவசாயிகள், மத்திய - மாநில அரசுகள் அளித்த பிரிமியத் தொகையை மட்டுமே வைத்துக் கொண்டு விவசாயிகளுக்கு காப்பீடும் வழங்கி அதிலேயே பல்லாயிரம் கோடியை சுருட்டி வருகிறது. விவசாயிகளுக்குப் பயிர் காப்பீடு நிறுவனம் இழப்பீட்டை வழங்க வேண்டாம். மத்திய- மாநில அரசுகளும் விவசாயிகளும் செலுத்தும் பிரிமியத் தொகையை விவசாயிகளுக்கு அளித்தாலே போதுமானதாகும். ஆகவே நாகையில் இந்த முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விவசாயிகளது வங்கிக் கணக்கிலேயே இரண்டு அரசுகளின் பிரிமியத் தொகையை அளித்தாலே விவசாயிகளுக்குப் போதுமானதாக இருக்கும்." என்றார் மேலும் இது தொடர்பாக குருகோபிகணேசன் நாகை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
இதையும் படிங்க: 15 அடி தடுப்புச் சுவரால் 10 ஆண்டு காலப் போராட்டம்