கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு வார்டுகளை நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன்நாயர் இன்று ஆய்வுமேற்கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கரோனா அறிகுறி உள்ளவர்கள், பாதித்தவர்கள், பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்கள் என்று மூன்று வகையாகப் பிரித்து இந்தப் புதிய கட்டடத்தில் ஒவ்வொரு அறையிலும் தனித்தனியாக சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் இதுவரை யாருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை. வெளிநாடுகளிலிருந்து நாகை மாவட்டத்திற்கு இதுவரை 413 பேர் வந்துள்ளனர். 20 நாள்கள் மேலாகியும் எந்தவித பாதிப்பும், அறிகுறியும் இல்லாமல் 70 பேர் நலமாக உள்ளனர்.
மீதமுள்ள 343 பேர் அவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக்குழுவினரால் கண்காணிக்கப்பட்டுவருகின்றனர். அவர்களது வீடுகளில் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாக ஸ்டிக்கர் ஒட்ட திட்டமிட்டுள்ளோம்.
மேலும் அவர்கள் கையில் கிருமி மற்றவர்களுக்குப் பரவாமல் தடுப்பதற்காக நான் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என்று மை மூலம் சீல்வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்க இருக்கிறோம்.
மேலும், நாகை மாவட்டத்திற்கு வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்களையும் மருத்துவக் குழுவினர் கண்காணித்து ஆலோசனைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது" என்றார்.
அப்போது மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் மகேந்திரன், தலைமை மருத்துவர் ராஜசேகர், அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: கரோனா முன்னெச்சரிக்கை: களத்தில் இறங்கிய பஞ்சாயத்து தலைவர்கள்