இந்தியாவில் இந்தியை ஆட்சி மொழியாக்குவதற்கு நிறைவேற்றப்பட்ட அலுவல் மொழி சட்டத்தை எதிர்த்து 1965 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது அரசின் அடக்குமுறையால் தமிழ்நாட்டில் பலர் உயிரிழந்தனர். அதனை நினைவு கூறும் விதத்தில் ஆண்டுதோறும் ஜனவரி 25ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம், தமிழ்நாட்டில் அனுசரிக்கப்படுகிறது.
இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே உள்ள ஏ.வி.சி கல்லூரியில் வணிகவியல் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த மாணவர் சாரங்கபாணி, கல்லூரி வளாகத்திலேயே தன்மீது தீவைத்துக் கொண்டு உயிர் நீத்தார். இந்நிலையில், மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை ஒட்டி மயிலாடுதுறை அடுத்த மன்னம்பந்தலில், மொழிப்போர் தியாகி சாரங்கபாணி நினைவு தூணில் அனைத்துக் கட்சி சார்பில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில், அதிமுக சார்பில் மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் ராதாகிருஷ்ணன், சீர்காழி சட்டப்பேரவை உறுப்பினர் பாரதி, திமுக சார்பில் மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன், ஒன்றிய செயலாளர் மூவலூர் மூர்த்தி, தமிழர் தேசிய முன்னணி சார்பில் மாவட்ட தலைவர் முரளிதரன், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் உள்பட பலர் மலர் அஞ்சலி செலுத்தி கோஷமிட்டனர்.