கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாகை மாவட்டம் முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்களுக்கு மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடுகளை விதித்து விற்பனைக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மதியம் ஒருமணி வரை மட்டுமே பெட்ரோல் நிலையங்கள் இயங்குகிறது.
இந்நிலையில், நாகை அடுத்துள்ள வடக்குப் பொய்கைநல்லூர் பகுதியில் அதிமுக நிர்வாகி சிவபெருமாள் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். அந்தப் பெட்ரோல் பங்கிற்கு கீச்சாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த சரத்குமார், தனது இருசக்கர வாகனத்திற்காக பாட்டிலில் பெட்ரோல் வாங்கிச் சென்றுள்ளார்.
இதைத்தொடர்ந்து, பெட்ரோலை பைக்கில் ஊற்றி ஸ்டார்ட் செய்தபோது பைக் ஸ்டார்ட் ஆகாததால் சந்தேகம் அடைந்த அவர், பெட்ரோலை நுகர்ந்து பார்த்தபோது அதில் மண்ணெண்ணெய் கலப்படம் செய்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, தனது நண்பர்களுடன் பெட்ரோல் பங்கிற்குச் சென்ற அவர், நடந்ததை கூறி வாக்குவாதத்தில் ஈடுபட பெட்ரோல் பங்க் ஊழியர்கள் அலட்சியமாக பதில் அளித்துள்ளனர்.
அப்போது அங்கு பெட்ரோல் போட வந்த மற்ற வாகன ஓட்டிகளும் சந்தேகத்துடன் பெட்ரோலை நுகர்ந்து பார்த்தபோது மண்ணெண்ணெய் கலந்திருப்பதை உணர்ந்து அவர்களும் பெட்ரோல் பங்க் நிர்வாகத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: கள்ளத்தனமாக மதுபானம் விற்ற 6 பேர் கைது
!