மயிலாடுதுறை மாவட்டம், திருவாவடுதுறை பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன் (30). இவர் ரயில்வே துறையில் பணிபுரிகிறார். பார்த்திபன் நரசிங்கன்பேட்டையைச் சேர்ந்த செல்வக்குமாரி (24) என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் லிபிஷா என்ற பெண் குழந்தை இருக்கிறாள்.
திருமணமானது முதல் பார்த்திபனும், அவரது தாயார் தனலட்சுமியும் செல்வக்குமாரியிடம் 25 சவரன் நகை வரதட்சனையாக வேண்டும் என கூறி துன்புறுத்தியுள்ளனர். ஆனால், ஒரு கட்டத்தில் செல்வக்குமாரியின் பெற்றோர் வீட்டை விற்று நகை போடுகிறோம் என்று கூறி, வீட்டை விற்க நடவடிக்கை எடுத்துவந்துள்ளனர்.
ஆனால், நாளுக்கு நாள் மாமியாரின் கொடுமை அதிகரிக்கவே இது குறித்து செல்வக்குமாரி தன் சகோதரன் செல்வராஜிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு பார்த்திபன் வெளியூருக்கு சென்ற நேரத்தில், மாமியார் நகை கேட்டு தொடர் வற்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.
இதனால், மனமுடைந்த செல்வக்குமாரி நேற்று (மார்ச்.18) இரவு தனது குழந்தையை கொன்றுவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையறிந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து தாய், மகள் இருவரது உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் இது குறித்து தகவலறிந்த ஆர்டிஓ பாலாஜி இன்று (மார்ச்.19) மருத்துவமனைக்குச் சென்று தாய், மகள் இருவரது உடலையும் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து, குத்தாலம் காவல் துறையினர் செல்வக்குமாரியை தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து மாமியார் தனலட்சுமி (48), கணவர் பார்த்திபன் (30) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: திருவாவடுதுறையில் தாயும்- கைக் குழந்தையும் உயிரிழப்பு!