மக்களவைத் தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதைத் தவிர்க்க, மயிலாடுதுறையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், மயிலாடுதுறை அருகே அக்களுர் கிராமத்தில், அதிமுக சார்பில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், தனி வட்டாட்சியர் தையல் நாயகி தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர், அக்களுர் கிராமத்திற்குச் சென்று சோதனை செய்தனர். அப்போது அதிமுகவைச் சேர்ந்த மோகன் (48), சார்பில் வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்வது கண்டறியப்பட்டது.
உடனடியாக, தனி வட்டாட்சியர் தையல் நாயகி பணம் பட்டுவாடா செய்தவர்களைப் பிடித்து, மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் கொண்டு சென்றனர். சோதனையில், 22 அட்டைகளில், 64 வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக ரூ.16ஆயிரம் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரும் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.