மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் 25 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், ஒரு வாரத்திற்கு முன் ஒரத்தூரில் நடந்த மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ”மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைப்பது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது, என்றார்.
இந்நிலையில், மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் 27வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை, எம்எல்ஏக்கள் மயிலாடுதுறை ராதாகிருஷ்ணன், பூம்புகார் பவுன்ராஜ், சீர்காழி பாரதி ஆகியோர் சந்தித்தனர். மயிலாடுதுறையினை தனி மாவட்டமாக அறிவித்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், எஸ்பி அலுவலகம் அமைப்பதற்கு ஆதீனம் இடம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, ஆதீனம் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள முளப்பாக்கம் கிராமத்தில் 36 ஏக்கர் இடத்தை தருவதாக ஆதீனம் 27வது குருமகாசந்நிதானம் ஒப்புதல் தெரிவித்தார். தொடர்ந்து எம்எல்ஏக்கள் முளப்பாக்கம் கிராமத்தில் உள்ள இடத்தை, மயிலாடுதுறை தாசில்தார் முருகானந்தம் முன்னிலையில் பார்வையிட்டனர். மேலும், அந்த இடம் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்திற்கும் ஏதுவாகுமா என்பது குறித்தும் ஆய்வு செய்தனர். விரைவில் தனி மாவட்ட அறிவிப்பு முதலமைச்சர் அறிவிப்பார் என மூன்று எம்எல்ஏக்களும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மழலையர் பள்ளிகளுக்கான விடுமுறை திடீரென நிறுத்தி வைப்பு!