மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஆற்றின் வழியே கடந்த நான்கு நாட்களாக இரண்டு லட்சம் கன அடிக்கு மேல் உபநீர் செல்வதால் கொள்ளிடம் ஆற்றின் உள்ளே அமைந்துள்ள திட்டுக்கிராமங்களான நாதல்படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளமணல் உள்ளிட்ட கிராமங்களைச்சேர்ந்த 700 குடும்பங்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக வழங்கப்படுகிறதா என அமைச்சர்கள் ரகுபதி, கணேசன் ஆகியோர் படகுமூலம் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச்சென்று பார்வையிட்டனர். பின்னர் உடனடியாக திமுக நிவாரண நிதியிலிருந்து 700 குடும்பங்களுக்கு தலா 1000 ரூபாய் வீதம் ஏழு லட்சம் வழங்கினர்.
அதுமட்டுமல்லாமல் விவசாய நிலங்கள் பாதிப்பு குறித்து முதலமைச்சரிடம் எடுத்துரைத்து மக்களின் கோரிக்கையான புயல் பாதுகாப்பு மையம் அமைத்துத்தரப்படும் என உறுதியளித்தனர். மேலும் பாதிக்கப்பட்ட பயிர்களுக்குத் தண்ணீர் வடிந்த உடன் உரிய கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்கப்படும் எனவும் உறுதியளித்தனர்.
இதையும் படிங்க:"நாடாளுமன்றத்தை கேலி செய்வதை நிறுத்துங்கள்" - மத்திய அரசு மீது டெரிக் ஓ பிரையன் காட்டம்!