நாகப்பட்டினம் - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் புதுப்பிக்கப்பட்ட ரயில்வே மேல்பாலத்தைத் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘மாநில விவகாரத்தில் சட்டம், ஒழுங்கை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கடைபிடித்தது போல் காஷ்மீர் செல்வதை தவிர்த்து அந்த விவகாரத்தை திமுகவினர் ஏற்று நடப்பார்கள் என நான் நம்புகிறேன்.
பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுப்பதில் தமிழ்நாடு காவல் துறையினர் முழு கவனத்துடன் திறமையாக செயல்படுவார்கள். எனவே அவர்களது ஊடுருவல் குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். மேலும், உலக நாடுகள் பொருளாதார சரிவை சந்தித்த போதிலும் இந்தியா நிலையான ஒரு பொருளாதாரத்தை வைத்திருந்து.
அதுபோல் இந்திய பொருளாதாரத்தில் ஏற்றத் தாழ்வு என்பது இயற்கையான ஒன்று. அதனை சரிசெய்யக்கூடிய திறமையும், ஆற்றலும் பெற்றவர்கள் இந்திய பொருளாதார வல்லுனர்கள்.
எதிர்க்கட்சியினர் என்றால் வலுவான குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள். அதனால் அவர்கள் வைக்கும் குற்றச்சாட்டு தவறு என நாம் சொல்ல முடியாது.
அதே சமயம் திமுக தலைவர், காஷ்மீரில் 370 நீக்கம் செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவித்துவிட்டு தற்போது காஷ்மீரில் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டுமென தனது போராட்டத்தை மாற்றிக்கொண்டு உள்ளார். இதுபோல் கூறுவது அரசியலில் சகஜம். இதைத்தான் ஸ்டாலின் செய்துவருகிறார் என்றார்.