மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்துத்துறை வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது கரோனாவால் பெற்றோரை இழந்த 15 குழந்தைகள், 5 மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு ரூ.49 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார். இதைத்தொடர்ந்து காவல், வருவாய், ஊரகவளர்ச்சி, வேளாண், பொதுப்பணி, மின்சாரம், சுகாதாரம், நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்தும் அவர் கலந்தாலோசித்தார்.
பயிர்காப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை
நிகழ்ச்சிக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மயிலாடுதுறை மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளிலும் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளின் இல்லத்துக்கே கொண்டு சேர்க்கும் பணி தொடங்கப்படவுள்ளது.
மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பயிர்க்காப்பீட்டுத் தொகை சரிவர வழங்கப்படவில்லை எனப் புகார் எழுந்துள்ளது. இது குறித்த விவரங்கள் மாவட்ட ஆட்சியரிடம் கேட்கப்பட்டுள்ளன. விவரங்கள் கிடைக்கப் பெற்றவுடன் புகார் முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மழை, வெள்ள காலங்களில் நீர் தேங்கும் பகுதிகள் கண்டறியப்பட்டு, வடிகால் வசதி மேம்படுத்தப்படும்” என்றார். கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் நிவேதா முருகன், ராஜகுமார், பன்னீர்செல்வம், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: தீ விபத்தில் காயமடைந்தோரை நேரில் பார்வையிட்ட அமைச்சர் எ.வ.வேலு!