மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தம் ஒன்பது லட்சத்து 81 ஆயிரத்து 82 பேர் உள்ளனர். அவர்களில் 18 வயதுக்கு மேற்பட்ட கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியுடைவர்கள் ஏழு லட்சத்து 61 ஆயிரத்து 320 பேர் உள்ளனர். இவர்களில் மூன்று லட்சத்து 53 ஆயிரத்து 432 பேருக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 22 ஆயிரத்து 656 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, 22 ஆயிரத்து 135 பேர் குணமடைந்துள்ளனர். மாவட்டத்தில் 15 விழுக்காடாக இருந்த தொற்று தற்போது 1.6 விழுக்காடாகக் குறைந்துள்ளது.
தடுப்பூசி விவரம்
மூன்றாம் கட்ட சிறப்பு தடுப்பூசி முகாமில், 53,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தத் திட்டமிடப்பட்டது. மயிலாடுதுறை தாலுகா உளுத்துக்குப்பை ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு முகாமினை மா. சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.
இதையடுத்து சீர்காழி தாலுகா தென்பாதி தனியார் மண்டபத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை மா. சுப்பிரமணியன் ஆய்வுசெய்தார். மேலும் மாவட்டத்தில் 100 விழுக்காடு கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட புதுப்பட்டினம், நல்லூர், மகேந்திரபள்ளி உள்ளிட்ட 15 ஊராட்சிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
கட்டாயப்படுத்துவது தவறல்ல
பின்னர் செய்தியாளரைச் சந்தித்த மா. சுப்பிரமணியன், “தமிழ்நாட்டில் இன்றைய கரோனா தடுப்பூசி மெகா முகாமில் 15 லட்சம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில் மாலை 4.30 மணி வரை இலக்கினை கடந்து 18 லட்சத்து 76 ஆயிரத்து பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
நாம் தற்போது இருக்கின்ற இந்த இக்கட்டான காலத்தில் உலக அளவில் தடுப்பூசி போட்டுக்கொள்வது மட்டும்தான் தீர்வாக உள்ளது. மக்களின் நல்வாழ்வுக்காகத் தடுப்பூசி போடுங்கள் எனக் கட்டாயப்படுத்தினாலும் அது தவறில்லை” எனத் தெரிவித்தார்.
பின்னர் சீர்காழி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள புதிய சி.டி. ஸ்கேன் மையத்தை மா. சுப்பிரமணியன் திறந்துவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் செ. ராமலிங்கம், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் செல்லவிடாமல், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ். ராஜகுமார், நிவேதா எம். முருகன், எம். பன்னீர்செல்வம், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: நகைக்கடன் முறைகேடுகளை தடுக்க குழு அமைத்தது அரசு