மயிலாடுதுறை: தேசியக் குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக மாநில அளவில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சியை மயிலாடுதுறையில் உள்ள கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு மாத்திரைகள் வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜகுமார், நிவேதா முருகன், பன்னீர்செல்வம், மருத்துவத்துறை இயக்குனர் செல்வநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதனைத்தொடர்ந்து மேடையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், “மயிலாடுதுறை அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. ரூ.7.18 கோடி மதிப்பீட்டில் புதிய எம்ஆர்ஐ ஸ்கேன் இயந்திரம் பொறுத்தப்பட்டு தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 54 ஆயிரத்து 439 அங்கன்வாடி மையங்கள், 46ஆயிரத்து 260 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், 12 ஆயிரத்து 526 தனியார் பள்ளிகள், 3 ஆயிரத்து 83 அனைத்து வகை கல்லூரிகள் உள்ளது.
இதில் பயிலும் குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவருக்கும் குடற்புழு மாத்திரைகள் வழங்கப்படுகிறது. இன்று விடுபடுபவர்களுக்கு வரும் 24ஆம் தேதி சிறப்பு முகாம் நடத்தி மாத்திரைகள் வழங்கப்படும். தமிழ்நாட்டில் ஆரம்பசுகாதார நிலையம், துணை சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள் என்று ஆயிரத்திற்கும் மேற்பட்டவைகள் கட்டடங்கள் சேதமடைந்து பயன்படுத்த முடியாமல் வாடகை இடங்களில் இயங்கி வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் சேதமடைந்த மற்றும் வாடகை கட்டடத்தில் இயங்கும் ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தை கூட நிரந்தர கட்டடத்திற்கு மாற்ற முயற்சி மேற்கொள்ளப்படவில்லை என குற்றம் சாட்டினார்.
இதைத்தொடர்ந்து பேசிய அவர் நாடாளுமன்ற உறுப்பினருக்கு வருடத்திற்கு ரூ.5 கோடி, சட்டமன்ற உறுப்பினருக்கு வருடத்திற்கு ரூ.3 கோடி தொகுதி மேம்பாட்டு நிதி வழங்கப்படுகிறது. இந்த மேடையில் ஒரு எம்பி 3 எம்எல்ஏக்கள் இருக்கிறீர்கள் நெஞ்சில கை வச்சு சொல்லுங்கள் இதுல யாராவது ஒருத்தராவது என்னோட துறைக்கு நிதி வழங்கி இருக்கிறீர்களா? என்று கேட்டார். அப்போது அவரது ஆதங்கத்துக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் தான் ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி வழங்கியிருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து அமைச்சர் அவருக்கு நன்றி தெரிவித்தார். மேலும், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி நிதியிலிருந்து மருத்துவத் துறைக்கு உதவிட வேண்டும் என்றார்.
இதைத்தொடர்ந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் மையத்தை தொடங்கிவைத்து ரூ.45 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் புதிய கட்டிட கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். பின்னர், குத்தாலம் ஒன்றியம் கிளியனூர் ஊராட்சியில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதாரநிலைய புதிய கட்டடத்தை திறந்துவைத்ததோடு, சீர்காழி தாலுகா கொள்ளிடம் ஆரம்பசுகாதார நிலைய புறநோயாளிகள் பிரிவு, நாங்கூர் துணைசுகாதார நிலைய கட்டடம், சீர்காழி அரசு மருத்துவமனையில் ஒலி புகா அறை ஆகிய கட்டடங்களின் கல்வெட்டை திறந்துவைத்து கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை அமைச்சர் மா.சுப்ரமணியன் வழங்கினார்”.
இதில் சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர் சோமசுந்தரம், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உமாமகேஸ்வரி, நகராட்சி தலைவர் செல்வராஜ், ஒன்றியக்குழு தலைவர்கள் காமாட்சி, மகேந்திரன், துணை இயக்குனர் அஜித்பிரபுகுமார், இணை இயக்குனர் நிர்மல்சன், மயிலாடுதுறை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:parliament election 2024: வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு 2ம் கட்ட பயிற்சி பாசறை: அனல் பறக்கும் தேர்தல் களம்!