நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் மீன்பிடித் துறைமுகம் அமைக்க வேண்டும் என மீனவர்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்திவந்தனர். இதையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரங்கம்பாடியில் ரூ.120 கோடி செலவில் புதிய துறைமுகம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில், நேற்று இரவு இங்கு மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் தமிழ்நாடு மீன்வளத் துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் கலந்துகொண்டு மீன்பிடித் துறைமுகத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். மேலும் இந்த விழாவில் கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன், மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பவுன்ராஜ், ராதாகிருஷ்ணன், பாரதி, அரசுத் துறை அலுவலர்கள் மீனவ பஞ்சாயத்தார்கள், மீனவர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய அமைச்சர் ஓ.எஸ். மணியன் விழா பேரூரை ஆற்றியதோடு, மீனவர்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார், அவரைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், எப்போதுமே மீனவர்களின் வாழ்வாதாரத்தில் தனி அக்கறை கொண்டு அரசு செயல்படுகிறது என்று தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் பேசும்போது, துறைமுகம் அமைவதன் மூலம் மீனவர்களின் வாழ்வாதாரம் உயரும். இயற்கைச் சீற்றங்களிலிருந்து பாதுகாக்க இந்தத் துறைமுகம் உதவும். இதன்மூலம் 10 மீனவ கிராம மீனவர்கள் பயன்பெறலாம். இது மிகச்சிறந்த துறைமுகமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.