கர்நாடகாவில் பெய்த கன மழை காரணமாக திறந்துவிடப்பட்ட காவிரி உபரி நீரானது தமிழ்நாட்டிற்கு வந்தடைந்தது. இதனையடுத்து மேட்டூர் அணையின் நீர் இருப்பு அதிகரித்ததால் கடந்த 13-ஆம் தேதி அந்த அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டது.
இந்த நீரானது இன்று காலை நாகை மாவட்ட எல்லையான திருவாலங்காடு காவிரி, விக்ரமன் ஆறுகளின் நீர் தேக்கிகளுக்கு வந்தடைந்தது. இதையடுத்து, பொதுப்பணித் துறை அலுவலர்களும், விவசாயிகளும் மலர்தூவி நீரை வழிபட்டனர்.
பொதுப்பணித்துறை அலுவலர்களின் சிறப்பு பூஜைக்கு பிறகு, காவிரி மதகுகளின் கதவுகளைத் திறந்து தண்ணீரை திறந்துவிட்டனர்.
காவிரியில் முதல் கட்டமாக 600 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் விதிகளின்படி, காவிரி கடலுடன் கலக்கும் பூம்புகாருக்கு முன்னதாக, மேலையூர் கடையணை பகுதிக்கு காவிரி நீர் சென்று சேர்ந்த பின்னர், மற்ற கிளை ஆறுகள், வாய்க்கால்களுக்கு தண்ணீர் பிரித்து அனுப்பப்படும். அந்தவகையில் இன்னும் ஓரிரு தினங்களில் பாசனத்திற்காக தண்ணீர் பகிர்ந்து அளிக்கப்படும்.