மயிலாடுதுறை: குத்தாலம் அடுத்த பெரியேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரா. 11-ஆம் வகுப்பு படிக்கும் தனது தங்கை மகனுடன் சேர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த இளங்கோவன் என்பவருக்குச் சொந்தமான வாழைத் தோப்பு பகுதியில் தன் ஆடுகளை மேய்ச்சல் ஓட்டச் சென்றுள்ளார்.
அப்போது காற்றில் அறுந்து விழுந்து கிடந்த மின்சாரக் கம்பியை எதிர்பாராத விதமாக மிதித்ததில் மின்சாரம் தாக்கி சந்திரா துடிதுடித்துள்ளார். உயிருக்குப் போராடிய தனது பெரியம்மாவைக் காப்பாற்றச் சென்ற சிறுவன் மீதும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டான். இதில் சம்பவ இடத்திலேயே சந்திரா துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
படுகாயம் அடைந்த சிறுவனை அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.அங்குச் சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பூர் போலீசார், மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவன் மற்றும் அவனது பெரியம்மா ஆகியோரின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி பள்ளி மாணவனும், அவனது பெரியம்மாவும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: Mondous Cyclone: இரண்டு மணி நேரம்தான் பவர்கட் - தயார் நிலையில் மின்சார வாரியம்!