மயிலாடுதுறை: மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றியத் தலைவர் காமாட்சி மூர்த்தி தலைமையில் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் ராஜகுமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
கூட்டத்தில் ஒன்றிய பொது நிதியில் பெருமளவில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டி, உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும் உறுப்பினர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து திமுக ஒன்றியக் குழுத் தலைவரை கண்டித்து திமுகவை சேர்ந்த கவுன்சிலர் முருகமணி வெளிநடப்பு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முருகமணி, "ராதாநல்லூர், வேப்பங்குளம், பட்டவர்த்தி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடிநீர், சாலை வசதிகள் செய்யப்படாமலேயே அதற்காக செலவு செய்ததாக பில் போட்டுள்ளனர். ஒரே சாலையை வேறு வேறு இடங்களில் போட்டதாகவும் கணக்கு காட்டுகின்றனர்.
ஊராட்சி ஒன்றிய பணிகள் குறித்த விபரங்களின்றி அதற்கான நிதியில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது. ஊராட்சி ஒன்றிய தீர்மானங்கள் உறுப்பினர்களின் அனுமதியின்றியே திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை ஒரு கோடியே 38 லட்சம் ரூபாய் அளவில் முறைகேடுகள் நடைபெற்றதை நான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அறிந்தேன்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: மாணவர்களுக்காகவே நான்... தண்டோரா மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் தலைமையாசிரியர்!