மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகேயுள்ள கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமங்களான அளக்குடி, முதலைமேடு நாதல் படுகை, வெள்ளை மணல் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பு மையத்திற்கு செல்ல வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு அலுவலர் லலிதா, வருவாய்த் துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு வீடாகச் சென்ற சிறப்பு அலுவலர், இன்று (நவம்பர் 24) இரவிலிருந்து கனமழை பெய்யக் கூடும் என்பதால் அனைவரும் பாதுகாப்பு மையங்களுக்கு செல்ல வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்து, புயல் பாதுகாப்பு மையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களிடம் ஆலோசனை நடத்தினார்.
இதேபோல், பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ் தரங்கம்பாடி, சந்திரபாடி, சின்னங்குடி, மாணிக்கபங்கு, வானகிரி, பூம்புகார் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு நேரிடையாகச் சென்று பொதுமக்களை சந்தித்தார்.
பின்னர் கூரை வீட்டிலும், தாழ்வான பகுதியில் வசிப்பவர்களை அரசு ஏற்பாடு செய்துள்ள முகாம்களுக்குச் செல்லுமாறும், தங்களது படகுகள், வலைகளை பத்திரமாக வைத்துக் கொள்ளவும், நிவர் புயல் கரையை கடக்கும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுரை வழங்கினார். இதில், மீனவ கிராம பஞ்சாயத்தார்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:நிவர் புயல் முன்னெச்சரிக்கை: ‘தொழிலாளர்கள் வேலைக்குச் செல்ல வேண்டாம்’- முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவு!