மயிலாடுதுறை நகராட்சிக்குள்பட்ட 12, 13, 14 ஆகிய வார்டுகளில் குடிநீரில் பாதாள சாக்கடை கழிவுநீர் கலப்பதைக் கண்டித்து முன்னாள் நகர் மன்ற துணைத் தலைவர் குண்டாமணி செல்வராஜ் தலைமையில், நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடைபெற்றது.
மேலும், நகரம் முழுவதும் பாதாளச் சாக்கடை பராமரிக்கப்படாமல், அதிலிருந்து வெளியேறும் கழிவுநீரால் நோய்த்தொற்று ஏற்படுவதாக, பல முறை ஆணையரிடம் புகார் அளித்ததாகவும் போராட்டக்காரர்கள் குற்றச்சாட்டை வைத்தனர்.
எனினும், நகராட்சி ஆணையர் அந்தப் புகார் மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி இந்த உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்தியதாக செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
இந்தப் போராட்டத்தின்போது, மண் பானையில் கழிவுநீரை எடுத்துவந்து, நகராட்சி அலுவலகம் முன் அதனை உடைத்து, போராட்டக்காரர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவுசெய்தனர்.
அதுமட்டுமில்லாமல், உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுத்து, கழிவுநீர் குழாயை நிரந்தரமாக பழுதுநீக்கித் தர முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், செல்வராஜுடன் சேர்த்து, போராட்டக்காரர்களையும் கைதுசெய்தனர்.