தமிழ்நாடு அரசு இன்று (மே.15) முதல் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்குக் கரோனா சிறப்பு நிவாரண நிதியின் முதல் தவணைத் தொகையாக ரூ. 2 ஆயிரத்தை வழங்க உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து மயிலாடுதுறை மாவட்டம், கோமல் கிராமத்தில் உள்ள கூட்டுறவு அங்காடியில், கரோனா சிறப்பு நிவாரண நிதி ரூபாய் இரண்டாயிரத்தை பயனாளிகளுக்கு வழங்கி, மாவட்ட ஆட்சியர் லலிதா மற்றும் பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் நிவேதா முருகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதேபோல் மயிலாடுதுறை கீழநாஞ்சில்நாடு பகுதியில் உள்ள அங்காடியில், கரோனா சிறப்பு நிவாரண நிதி முதல் தவணைத் தொகை ரூ. 2 ஆயிரத்தை சட்டப்பேரவை உறுப்பினர் ராஜ குமார், மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலையில் பயனாளிகளுக்கு வழங்கினார்.
இதன் மூலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் உள்ள 2 லட்சத்து 68 ஆயிரத்து 945 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்குக் கரோனா சிறப்பு நிவாரண உதவித்தொகையாக தலா ரூ. 2 ஆயிரம் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சிகளில் பயனாளர்கள் அனைவரும் முகக் கவசங்கள் அணிந்தும், தகுந்த இடைவெளியைப் பின்பற்றியும் கரோனா நிதி உதவி தொகையைப் பெற்றுச் சென்றனர். மேலும் அரசு கரோனா முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து பாதுகாப்பாக இருக்க பொதுமக்களைக் கேட்டுக்கொண்டனர்.
இதேபோல நாகை, வேதாரண்யம், கீழ்வேளூர், திருக்குவளை ஆகிய நான்கு தாலுகாவில் உள்ள 356 நியாயவிலைக் கடைகளில் 2 லட்சத்து பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் கட்டத் தவணையாக ரூ.2 ஆயிரத்தை நிவாரண நிதியாக வழங்கினார்.
இதையும் படிங்க: ஆக்சிஜன், ரெம்டெசிவிரை கள்ளச்சந்தையில் விற்றால் குண்டர் சட்டம் பாயும்!