மயிலாடுதுறை: தமிழகத்தில் காவிரி கடைமடைப் பகுதியான மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயம் பிரதானத் தொழிலாக இருந்து வருகிறது. இந்தப் பகுதியில் நெல், பருத்தி, கரும்பு மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டில் 90,000 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு, 15 சதவீதம் அறுவடை முடிவுற்றுள்ளது.
இந்நிலையில், மேக்கிரிமங்கலம் கிராமத்தில் கடந்த வாரம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தைத் திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, மாவட்டம் முழுவதும் 119 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் எனத் தெரிவித்தார். அதன்படி மாவட்டம் முழுவதும் படிப்படியாக நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், செம்பனார்கோவில் ஒன்றியத்தில் உள்ள சேமங்கலம் ஊராட்சியில், அறுவடை செய்த நெல்லை சேமங்கலம் திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையத்துக்கு விற்பனைக்காக கொண்டு வந்து விவசாயிகள் காத்து வந்தனர். இரவு நேரங்களில் மழை பெய்து வருவதால், கொட்டி வைத்துள்ள நெல்லை இரவு நேரங்களில் தார்ப்பாய் கொண்டு மூடியும், பகல் நேரத்தில் வெயிலில் காயவைத்தும் நெல்லை பாதுகாக்க விவசாயிகள் பெரும்பாடு பட்டனர்.
இதனையடுத்து உடனடியாக நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க விவசாயிகள் விடுத்த வேண்டுகோளை ஏற்று, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி சேமங்கலம் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை இன்று (ஆக 10) திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''சேமங்கலம் பகுதியில் நெற்பயிர்கள் அறுவடை செய்துள்ள தகவல் காலதமாதமாக தெரிய வந்தது. இதனால் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டும் காலதாமதமானது. இதனை கண்காணிக்கத் தவறிய அலுவலர்கள் மீது துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவிடப்படும்''எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர், "இன்று தற்காலிகமாக 40 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 38,441 ஹெக்டேர் குறுவை பயிரிடப்பட்டுள்ளது. 1 லட்சத்து 39 ஆயிரம் டன் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 264 டன் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு 59 லட்சத்து 79 ஆயிரத்து 420 ரூபாய் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
அறுவடை செய்யப்படும் பகுதிகளில் தேவைப்படும் இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறைகள் இருந்தால் விவசாயிகள் 04364-211054 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்" என்று கூறினார்.
மேலும், நேற்று இரவு மயிலாடுதுறையில் 6.5 சென்டிமீட்டர் மழைப் பதிவாகியுள்ளதாகவும், இதனால் அறுவடை செய்யப்பட வேண்டிய நெற்பயிர்கள், வயலில் சாய்ந்து சேதமடைந்துள்ள பயிர்கள் குறித்து விவசாயத்துறையினர் கணக்கெடுத்து வருவதாகவும் கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார்.
இதையும் படிங்க: சென்னையில் சிறுமியை முட்டிய மாடு இதோ... மாட்டுத்தொழுவங்களை திடீர் ஆய்வுசெய்த சென்னை ஆணையர்