மயிலாடுதுறை: இந்தியாவில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உயரிய போட்டியான தேசிய விளையாட்டுப் போட்டியின் 37 -வது போட்டி, கோவாவில் உள்ள பேம்போலிம் ஸ்டேடியத்தில் நேற்று (நவ.01) புதன்கிழமை நடைபெற்றது.
இதில், போல் வால்ட் (Pole Vault) எனப்படும் கோல் ஊன்றி உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்க, இந்தியாவின் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த வீராங்கனைகளும் விண்ணப்பித்த நிலையில், அதில் இந்தியன் ஒலிம்பிக் அசோசியேஷன் மூலமாக 14 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
அந்த வகையில், இப்போட்டியில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா சேத்திரபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி இளங்கோவன் என்பவரது மகள் பரணிகா (26), தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அவர் 3.90 மீட்டர் உயரம் தாண்டி இந்த வெற்றியைப் பெற்றார்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து, ரயில்வே துறையில் எழுத்தராக பணியாற்றி வரும் பரணிகாவுக்கு, பயிற்சியாளர் மில்பர், ரயில்வே துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பாராட்டுகளைத் தெரிவித்தனர். பரணிகா ஏற்கெனவே தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், மாநிலங்களுக்கு இடையிலான 61 -வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ( இன்டர் - ஸ்டேட் அத்லெட்டிக் நேஷனல் சாம்பியன்ஷிப் 2022 ) சாதனை படைத்துள்ளார்.
இந்த சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் 10 -ஆம் தேதி, சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் போல் வால்ட் எனப்படும் கோல் ஊன்றி உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில், போட்டியில் பரணிகா 4.05 மீட்டர் உயரம் தாண்டி புதிய சாதனையைப் படைத்தார்.
இந்த நிலையில், தற்போது மீண்டும் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்து, சொந்த ஊருக்கு வந்துள்ள விளையாட்டு வீராங்கனை பரணிகாவுக்கு பெற்றோர் மற்றும் கிராமமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். வீராங்கனை பரணிகா, குத்தாலம் பழையகூடலூர் ஜி.எஸ்.கே.மெட்ரிக் பள்ளியில் படித்தபோதே ஓட்டப்பந்தயம், தூரம் தாண்டுதல் போட்டிகளில் பங்கேற்று, பல்வேறு பதக்கங்களைப் பெற்றுள்ளார்.
பின்னர் சென்னை எத்திராஜ் கல்லூரியில் பி.காம் (B.Com), நுங்கம்பாக்கம் எம்.ஓ.பி வைஷ்ணவா கல்லூரியில் எம்.காம் (M.Com) பயின்றுகொண்டே, போல் வால்ட் கோச் மில்பர் என்பவரிடம் பயிற்சி பெற்று தற்போது இந்த சாதனையைப் படைத்துள்ளார்.
மேலும், இவர் விளையாட்டுத் துறையில் படைத்த சாதனைகள் காரணமாக, சென்னை ரயில்வே துறையில் எழுத்தர் பணி கிடைத்து, அங்கு பணியாற்றி வருகிறார். மேலும், ஆசிய அளவில் நடைபெறவுள்ள போட்டியில் பங்கேற்று, தங்கப் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்ப்பதே தன்னுடைய ஆசை என்றும், அதற்காக தீவிர பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.
தொடர்ந்து கூறிய அவர், சென்னையில் ஜூன் 10 -இல் நடைபெற்ற போல் வால்ட் போட்டியில், போட்டிக்கு பயன்படுத்திய போல் பிளக்ஸிபிளிட்டி குறைந்த காரணத்தால், 4.05 மீட்டர் தூரத்தைவிட அதிக உயரம் தாண்ட முடியாமல் போனதாகவும், தங்களைப் போன்றோருக்கு விளையாட்டு ஆர்வலர்கள் உதவி செய்தால் இன்னும் பல சாதனைகளை படைக்க உறுதுணையாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "2026ல் கப்பு முக்கியம் பிகிலு" - நடிகர் விஜய்! சட்டமன்ற தேர்தலா? உலக கோப்பை கால்பந்தா?