மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே புதுப்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசன், செல்லக்குட்டி ஆகியோர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பக்கத்து கிராமமான தாழம்பேட்டையில் பயன்படுத்தப்பட்ட படகை ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி வந்து, மீன்பிடித் தொழில் செய்து வந்தனர். சில நாட்களாக மீன்பிடித் தொழிலுக்குச் செல்லாமல் புதுப்பேட்டை கடற்கரையோரம் ஃபைபர் படகை நிறுத்தி வைத்திருந்தனர்.
நேற்று(ஆகஸ்ட் 10) காலை மீனவர்கள் இருவரும் கடற்கரைக்கு வந்து பார்த்தபோது, அவர்களுடைய ஃபைபர் படகு, அதிலிருந்த வலைகள், இன்ஜின் உள்ளிட்டப் பொருள்கள் எரிந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது தொடர்பாக காவல் துறையினருக்குத் தகவல் அளித்ததன் பேரில், சீர்காழி காவல் துணைக் கண்காணிப்பாளர் யுவபிரியா தலைமையில், பொறையார் காவல் துறையினர் வழக்குப்பதிந்து முன்விரோதம் காரணமாக அடையாளம் தெரியாத தீ வைத்து சென்றனரா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று(ஆகஸ்ட் 11) மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளர் விஜிகே. செந்தில்நாதன், புதுப்பேட்டை மீனவக் கிராமத்திற்கு நேரில் சென்று எரிந்து சேதம் அடைந்த ஃபைபர் படகினைப் பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட இரண்டு மீனவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் அவரது சொந்த நிதி ரூ. 10 ஆயிரத்தை மீனவர்களுக்கு நிவாரணமாக வழங்கினார். அப்போது அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: புதிய பாம்பன் பாலம் கட்டும் பணியில் ஈடுபட்ட மீனவர் உயிரிழப்பு!