நாகை மாவட்டம், மயிலாடுதுறை அக்களூர் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர், சித்தர்காடு பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது, அவரிடம் ஒரு நபர் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். பணம் கொடுக்க சிவக்குமார் மறுத்ததால் கையில் வைத்திருந்த கத்தியால் அவரைக் குத்தியுள்ளார்.
இதில் காயம் அடைந்த சிவக்குமார், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், சீர்காழி தாலுக்கா தொடுவாய் பகுதியைச் சேர்ந்த நாகராஜன் (32) என்பவர்தான் இந்த செயலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
இந்த விவகாரம் குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார், நாகராஜனை தேடிவந்தனர். இந்நிலையில், மயிலாடுதுறை தீப்பாய்ந்தாள் கோயில் அருகே அவர் தலைமறைவாகியிருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அவரைக் கைது செய்ய காவல் துறையினர் முயற்சித்தபோது, தப்பியோட முயன்ற நாகராஜன், பாலத்தில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார்.
இதில் அவரின் கால் எலும்பு முறிந்துள்ளது. பின்னர், அவரை மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்த காவலர்கள், சிகிச்சை முடிந்த பின்னர் அவரைக் கைது செய்தனர். சென்ற மாதம் மாதம் 26ஆம் தேதி செல்ஃபோன் மூலம் மயிலாடுதுறையைச் சேர்ந்த நபர் ஒருவரிடம் பணம் கேட்டு இவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அதேபோல், இந்த மாதம் 2ஆம் தேதி விடியற்காலையில் சீனிவாசபுரத்தில் கத்தி, கம்பி போன்ற ஆயுதங்களுடன் ஐந்து பேர் வழிப்பறி செய்யும் முயற்சியில் ஈடுபட காத்திருந்தபோது, மயிலாடுதுறை காவல் துறையினர் சுற்றி வளைத்து நான்கு பேரையும் கைதுசெய்தனர்.
ஆனால், அவர்களில் நாகராஜன் மட்டும் தப்பியோடி தலைமறைவாக இருந்து வந்த நிலையில், தற்பொழுது அவரும் சிக்கியுள்ளார். இவர் மீது கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதையும் படிங்க: 'நந்தா' பட பாணியில் வெங்காயம் திருடி, பணம் வாங்கிச் சென்ற நபர் கைது!