நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சியில் செயல்பட்டுவரும் பாதாள சாக்கடையால் அடிக்கடி குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவுநீர் வெளியேறி சாலை மற்றும் வீதிகளில் ஓடுவதும் வாடிக்கையாக உள்ளது. இந்த முக்கிய சாலைகளில் ஏற்படும் உடைப்பால் போக்குவரத்து தடைபட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
மயிலாடுதுறை - தரங்கம்பாடி செல்லும் கொத்தத்தெரு சாலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை உடைப்பு ஏற்பட்டு சரி செய்யும் பணி தாமதமாக நடந்துவந்ததால் போக்குவரத்து வேறு பாதையில் மாற்றிவிடப்பட்டுள்ளது. தற்போது, பாதாள சாக்கடை குழாய் உடைப்பு சரி செய்தும் சாலை சரி செய்யாமல் சேறும் சகதியுமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதனால், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனை கருத்தில் கொண்ட திமுக நகர செயலாளர் குண்டாமணி செல்வராஜ் அப்பகுதி மக்களுடன் 30க்கும் மேற்பட்டோர் சாலையில் கிடக்கும் சேற்றில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்தோடு, நகராட்சி மற்றும் அலுவலரை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு தாமதமான வாக்குச்சாவடிகள்