மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி உறுப்பினர் ராமலிங்கம், மயிலாடுதுறை சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பொன்னூர், பாண்டூர், கொற்கை உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ’கடந்த ஒருவார காலமாக பெய்த கன மழையின் காரணமாக சம்பா நாற்றுக்கள் நீரில் முழ்கியுள்ளன. இதனால், விவசாயிகள் கையறு நிலையில் உள்ளனர்.
இந்த பகுதியில், பொதுப்பணித் துறையினர் வடிகால்களை தூர்வாராமலே, தூர்வாரியதாக கணக்குக் காட்டி பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டனர். இதனால், சம்பா பயிர்கள் நீரில் முழ்கி விவசாயிகள் மிகுந்த நஷ்டத்தில் தவிக்கின்றனர். எனவே, மீண்டும் விவசாயம் செய்ய விவசாயிகளுக்கு போதுமான அளவு விவசாய கடன்களை கூட்டுறவு வங்கி மூலம் வழங்கவேண்டும். ஏற்கனவே வழங்கிய கடன்களை ரத்து செய்ய வேண்டும்.
தமிழ்நாடு அரசு இலவசமாக இடுபொருள்களை வழங்கி, உடனடியாக வடிகால்களை தூர்வார வேண்டும். ரயில்வே துறையில் வடமாநில ஊழியர்கள் அதிக அளவில் பணியில் உள்ளனர். ரயில்வே துறையில் 10 விழுக்காடு தமிழர்கள் மட்டுமே உள்ளனர். இது ரயில்வே துறைக்கு ஆட்களை தேர்ந்தெடுக்கும் முறை நேர்மையாக நடைபெறுகிறதா என்ற ஐயத்தை உண்டாக்குகிறது’ என்றார்.