மயிலாடுதுறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை வட்ட 23ஆவது மாநாடு நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாநிலச் செயற்குழு உறுப்பினர் பி. சண்முகம் பங்கேற்றார். அதன்பின் செய்தியாளரைச் சந்தித்த அவர் கூறுகையில்,
"மயிலாடுதுறை தனி மாவட்டமாகச் செயல்பட்டுவரும் நிலையில் பல்வேறு துறைகளுக்குத் தனி அலுவலர்கள் இல்லாமல் மாவட்ட நிர்வாகம் செயல்படுத்த முடியாத நிலைமையில் உள்ளது. உடனடியாக ஒவ்வொரு துறைக்கும் தனி அலுவலர்கள் நியமனம் செய்ய வேண்டும்.
மயிலாடுதுறை அடுத்த தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலை மூடப்பட்டதை உடனடியாக இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மயிலாடுதுறையில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். புதிய வேளாண் திருத்தச் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி வரும் 27ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடைபெறுகிறது. இதில் திமுகவும் பங்கேற்கும் என நம்புகிறோம்.
இதற்கான பரப்புரை கூட்டங்களுக்குப் பல்வேறு மாவட்டங்களில் காவல் துறையினர் அனுமதி மறுத்துவருகின்றனர். இதனைத் தமிழ்நாடு முதலமைச்சர் தலையிட்டு பரப்புரை கூட்டங்களுக்கு அனுமதி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்கப்பட்டதில் மோசடி நடந்துள்ளது. கூட்டுறவு வங்கி பொறுப்பில் இருந்தவர்கள் பல ஆயிரக்கணக்கான கோடிக்கு மோசடியில் ஈடுபட்டுள்ளனர். நகையை அடகு வைக்காமலேயே வைத்தது போன்றும், கவரிங் நகையை அடகு வைத்தும் கடன் பெறப்பட்டுள்ளது.
அமைச்சர், கூட்டுறவுத் துறை அலுவலர்கள் இணைந்து நடத்தியுள்ள கூட்டுக்கொள்ளை குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்தப்பட வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி ஓரிரு நாள்களில் உறுதி செய்யப்பட்டுவிடும்" என்றார்.
இதையும் படிங்க: திமுகவிற்கு எதிராக போராட்டம் நடத்துவோம் - கே.பாலகிருஷ்ணன்