நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழ்நாடு முக்குலத்து புலிகள் கட்சியின் விளக்கக் கூட்டம், அந்த அமைப்பின் தலைவர் ஆறு.சரவணன் தலைமையில் நடைபெற்றது.
அப்போது அவர் பேசுகையில், 'கூட்டத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் அரசு அனுமதிக்கக் கூடாது.
மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட வேண்டும். மாமன்னர் ராஜராஜசோழன் சிலையை அவர் கட்டிய தஞ்சை பெரிய கோயிலுக்குள் வைக்க வேண்டும்.
தேவர் ஜெயந்தி, மருதுபாண்டியர், பூலித்தேவன் விழாக்களுக்கு போடப்படும் 144 தடையை நீக்கம் செய்ய வேண்டும். நம் சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கப் போவது இல்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் 6 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை எதிர்த்து பரப்புரை செய்ய வேண்டும்' என்றார்.
அவர் மேற்கூறியவை அனைத்தும் தீர்மானங்களாக கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
அப்போது கூட்டத்தில் அமர்ந்திருந்த தொண்டர் ஒருவர், தான் சாக்கு பையில் கொண்டு வந்திருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சின்னமான மண்பானையை 'டமால்' என ஆவேசத்துடன் போட்டுடைத்து தனது எதிர்ப்பைத் தெரிவித்தார்.
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க: 'தந்தையின் நினைவை அவமதிக்கும்போது அமைதியாக இருக்க மாட்டேன்' - உதயநிதிக்கு ஜெட்லி மகள் எச்சரிக்கை