நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மணல்மேட்டில் மக்கள்தொடர்பு முகாம் நடைபெற்றது. வட்டாட்சியர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் வருவாய்த் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இம்முகாமில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, வேளாண் இடுபொருள்கள் என 30 பயனாளிகளுக்கு மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் ராதாகிருஷ்ணன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மக்கள்தொடர்பு முகாமில் 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியில் நெகிழி ஒழிப்பு, டெங்கு காய்ச்சல் தடுக்கும்முறை, வேளாண்மை உள்ளிட்ட கண்காட்சிகள் வைக்கப்பட்டிருந்தன.
கிருஷ்ணகிரி
காவேரிப்பட்டணம் ஒன்றியத்துக்குள்பட்ட பென்னேஷ்வரமடம் கிராமத்தில் மக்கள்தொடர்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு வருவாய் அலுவலர் சாந்தி தலைமையேற்று, பல்வேறு துறைகளிள் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
நிகழ்வில் பேசிய அவர், "மக்களைச் சந்தித்து அவர்கள் குறைகளை மனுவாக அலுவலர்கள் பெறுகின்றனர். அந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை விரைந்து எடுக்கப்படுகிறது. மாதந்தோறும் நடக்கும் மக்கள் குறை தீர்க்கும் முகாம் மூலம் அரசின் நலத்திட்டங்கள் மக்களுக்கு விரைந்துசெல்கின்றன.
இந்த முகாம் வழியாகப் பட்டா மாறுதல், வருவாய்த் துறையின் வழியாக வழங்கப்படும் பல்வேறு வகையான சான்றிதழ்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் தேசிய அடையாள அட்டை, மூன்று சக்கர நாற்காலிகள் போன்ற பல்வேறு உதவிகளை அரசு வழங்கிவருகிறது. இதுபோன்ற முகாம்களை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.
தேனி
மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆண்டிபட்டி அருகேயுள்ள எம். சுப்புலாபுரத்தில் நேற்று மக்கள்தொடர்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், ஆண்டிபட்டி சட்டப்பேரவை உறுப்பினர் மகாராஜனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவந்த சட்டப்பேரவை உறுப்பினர் மகாராஜன், விழா நடத்திய அலுவலர்களிடம், 'அரசு விழாவில் கலந்துகொள்ள எனக்கு ஏன் அழைப்பு விடுக்கவில்லை? நான் உங்களிடம் பணம் ஏதும் கேட்டேனா? என்னை புறக்கணிப்பது ஏன்?' என்று சரமாரியாகக் கேள்வி கேட்கத் தொடங்கினார்.
இதற்கு பதில் ஏதும் கூறாமல் அரசு அலுவலர்கள் மெளனமாகவே இருந்தனர். விழா மேடையில் ஆண்டிபட்டி அதிமுக ஒன்றிய குழுத்தலைவர் லோகிராஜன் இருந்ததால் அதிமுக அரசையும் விமர்சித்துள்ளார். அதன்பின்னர் மேடையில் எழுந்து நின்று ஆண்டிபட்டி தொகுதியில் நிறைவேற்றப்படாத குடிநீர் திட்டங்களை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, விழாவின் பாதியிலேயே வெளியேறிச் சென்றார்.
அதன்பின்னர் அதிமுக ஒன்றியக்குழுத் தலைவராக இருக்கும் லோகிராஜன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். லோகிராஜனும் மகாராஜனும் உடன்பிறந்த சகோதரர்கள் என்பதும் அவர்களுக்கிடையே ஏற்பட்ட மனக்கசப்பால் இருவரும் பேசிக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை வேண்டும்!