மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் நான்கு வழிச்சாலை பணிக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு, மாற்று இடம் வழங்கக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் இணைந்து திருக்கடையூரில் நான்கு வழிச்சாலை பணியில் ஈடுபட்டுள்ள தனியார் ஒப்பந்த நிறுவனம் முன்பு, கடந்த டிசம்பர் 21ஆம் தேதி முதல் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று(டிச.27) ஏழாவது நாள் போராட்டத்தின் போது சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் தனியார் ஒப்பந்த நிறுவனம் மற்றும் போராட்டக்குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் பல்வேறு கோரிக்கைகள் ஏற்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து இன்று(டிச.28) போராட்டம் முடிவுக்கு வந்தது.
பேச்சுவார்த்தையில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு எவ்வளவு இழப்பீடு வழங்குவது எனப் பேசி முடிவு செய்வதற்கும், குடியிருப்புகளுக்கு மாற்று இடம் வழங்குவதோடு அவர்களுக்கு அறிவித்த தொகையை இரட்டிப்பாக வழங்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களின் மேல் முறையீட்டு மனு மீது நடவடிக்கை எடுக்கவும் ஒப்பந்தம் கையெழுத்தானது என போராட்டக்குழுவினர் தெரிவித்தனர்.
மேலும் ஒப்பந்தத்தின் படி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: Tamil Nadu government employees union: நிதிச்சுமை இல்லாத நிர்வாக கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை