மயிலாடுதுறை வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சம்பா சாகுபடி மற்றும் நெல்லின் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதல் குறித்த முன்னெச்சரிக்கை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. வேளாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில், நாகை மாவட்டத்தில் உள்ள வேளாண்மை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
நாகை மாவட்டத்தில் நடப்பாண்டில் சம்பா சாகுபடி செய்ய 1.33 லட்சம் ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு விவசாய பணிகள் நடைபெறுவதாக அலுவலர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து பல்வேறு இடங்களில் நடவு செய்யப்பட்ட வயல்களில் தட்சிணாமூர்த்தி ஆய்வுசெய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் ''டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு சம்பா சாகுபடி செய்ய 13.5 லட்சம் ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு சாகுபடி பணிகள் நடைபெற்றுவருகிறது. நாகை மாவட்டத்தில் 3 லட்சத்து 30 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதல் உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
கிசான் திட்டத்தில் முறைகேடு செய்த தகுதி இல்லாத விவசாயிகளிடமிருந்து 68 சதவீதம் அதாவது ரூபாய் 105 கோடி திரும்பப் பெறப்பட்டுள்ளது. கிசான் திட்டத்தில் தனியார் கம்ப்யூட்டர் நிறுவனங்கள் அதிகளவில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிசான் திட்டத்தில் பதிவு செய்வதற்காக அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட ரகசிய எண்களை பயன்படுத்தி உள்ளதால் அதை வழங்கிய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்காலிக பணியாளர்கள் 100 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். துறை அலுவலர்கள் 40 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பணிநீக்கம், பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 97 பேரை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.
கிசான் திட்டத்தில் மீண்டும் ஊழல் நடக்காத வகையில் தமிழ்நாட்டில் முதல் முறையாக இருமுறை சரிபார்த்து திட்டம் ஏற்படுத்தப்பட்டு மத்திய அரசின் அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பு ஏற்படுவதாக கூறுவதால் தமிழ்நாட்டில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பெரும் நிதியை மாநில அரசு செலுத்துவதற்கு முடிவெடுத்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது'' என்றார்.
இதையும் படிங்க: பல குடிசைகளுக்கு நடுவே சில கான்கிரீட் வீடுகள்' - சமூக ஆர்வலரின் முயற்சி