கரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள சமூக இடைவெளி விட்டு இருக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த உணவு பொருள்களை சாப்பிட வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தண்மை கொண்ட கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மக்களும் இதனை குடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த கபசுர குடிநீர் ஆடாதொடை, அக்ரஹாரம், கற்பூரவள்ளி, திப்பிலி உள்ளிட்ட 15 வகை மூலிகைகளால் தயாரிக்கப்படுகிறது. அந்த வகையில், நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனம் சார்பில் கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் தயார் செய்து பொதுமக்களுக்கு தினந்தோறும் வழங்கி வருகின்றனர்.
மயிலாடுதுறை நகராட்சியில் கரோனா முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளும் நகராட்சி அலுவலர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு கபசுர குடிநீரை தருமபுர ஆதீன நிர்வாகத்தினர் வழங்கினர். அதற்கு சுகாதார பணியாளர்கள் நன்றி தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் கபசுர குடிநீரை வாங்கி பருகினர்.
இதையும் படிங்க: மகாராஷ்டிராவிலிருந்து நடந்து வந்த தமிழ்நாடு இளைஞர் தெலங்கானாவில் மாரடைப்பால் மரணம்!