நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனம் சைவத்தையும் தமிழையும் வளர்ப்பதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் மருத்துவ சேவையில் அளப்பரிய பணியாற்றி வருகிறது. கரோனா நோய்த்தொற்றில் இருந்து மக்கள் விடுபட தருமபுரம் ஆதீனத்துக்கு உட்பட்ட 27 திருக்கோயில்களிலும் கடந்த மாதம் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
கடந்த வாரம் தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், தமிழ்நாடு முதல்வரின் கரோனா நிவாரண நிதியாக 11 லட்சம் ரூபாய் வழங்கினார். இந்நிலையில், கரோனா வைரசை எதிர்கொள்ளும் வகையில், பொதுமக்களின் உடல் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, தருமபுரம் ஆதீனத்தின் சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
தருமபுரம் ஆதினம் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீரை கொடுத்து அருளாசி வழங்கினார். ஏராளமான பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து கபசுரக் குடிநீரை பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து தருமபுரம் மாரியம்மன் கோயில் தெரு, அச்சுதராயபுரம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் 1000 பேருக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: வெளியே நடமாடுவதால் கரோனா வைரஸின் பலத்தை அதிகரிக்கும் - தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி