மயிலாடுதுறை: ஸ்ரீ அமிர்தகடேசுவரர் கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு எமசம்ஹாரம் திருவிழா நடைபெற்றது.
தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் உள்ள ஸ்ரீ அமிர்தகடேசுவரர் கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, கால சம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. எமனை காலால் எட்டி உதைத்து சாமி சம்ஹாரம் செய்த திருத்தலம் திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேசுவரர் கோயில்.
இதையொட்டி, ஆண்டுதோறும் சித்திரை மாதம் மகம் நட்சத்திரத்தன்று இரவில் இக்கோயிலில் எமசம்ஹார திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டிற்கான சித்திரைத் திருவிழா கடந்த வாரம் 17ஆம் தேதி கொடியேற்றத்தடன் தொடங்கியது. இதில் ஆறாம் நாள் முக்கிய நிகழ்வான எமசம்ஹாரம் நேற்றிரவு(ஏப்.22) நடைபெற்றது.
காலசம்ஹார மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, இரவு ஆலய வெளிப் பிரகாரத்தில் வீர நடன காட்சியுடன் சாமியும் அம்பாளும் எழுந்தருளினர். அங்கு எமன் மார்க்கண்டேயரை துரத்தும் காட்சியும், இறைவன் காலனை வதம் செய்யும் எமசம்ஹாரமும் நடைபெற்றது.
இதில் அரசின் வழிகாட்டுதலின்படி தகுந்த இடைவெளியை பின்பற்றி குறைவான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில், விழா நடைபெற்றது.