நாகப்பட்டினம்: ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டமாக இருந்தபோது, தற்போதைய நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்துள்ள கீழ்வெண்மணி கிராமத்தில் 1968 ஆம் ஆண்டு கூலி உயர்வுக்காக நடந்த போராட்டத்தில் கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் என 44 பட்டியலின மக்கள் நிலச்சுவான்தார்களால் ஒரே குடிசையில் வைத்து எரித்து படுகொலை செய்யப்பட்டனர்.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கீழ்வெண்மணி படுகொலை சம்பவத்தில் பலியானவர்களுக்கு ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 55ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு கீழ்வெண்மணி கிராமத்தில் எரிக்கப்பட்ட ராமையாவின் குடிசை அமைந்திருந்த தற்போது நினைவுத் தூணில் இன்று (டிச.26) அனுசரிக்கப்பட்டது.
செங்கொடியை ஏற்றிவைத்து வெண்மணி நினைவுத் தூணியில் மலர் வளையம் வைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் மார்க்சிய சிந்தனை கொண்ட சமூக அமைப்புகள், கல்லூரி மாணவ மாணவிகள் அமைப்பினர், திராவிட அமைப்பைச் சேர்ந்தவர்கள் என ஏராளமானோர் பேரணியாக வந்து அஞ்சலி செலுத்தினர். வெண்மணி தியாகிகள் நினைவு நிகழ்ச்சியில் சிபிஎம் ஜி.ராமகிருஷ்ணன், கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கே.பாலகிருஷ்ணன், 'நவீன தாராளமய பொருளாதார கொள்கையால், கார்ப்பரேட் முதலாளிகள் சொத்துகள் குவித்து வரும் நிலையில், 'உழைப்பாளிகள்' இன்னும் இழப்புகளைச் சந்தித்து வருகின்றனர். இந்தியாவில் உள்ள கார்ப்பரேட் முதலாளிகளை எதிர்த்து எங்களது பயணம் தொடரும். சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை மக்களுக்கு இடையே மோதலை உருவாக்கி வெறுப்பு அரசியலை, மதவெறி ஆட்சியை மோடி அரசு நடந்து வருகிறது. மோடி அரசை அப்புறப்படுத்த இந்தியா கூட்டணியோடு (INDIA Alliance) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி வைத்துள்ளது' என்று குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், "தூத்துக்குடி மாவட்டம், இன்னும் இயல்புநிலைக்குத் திரும்பவில்லை. 21 கோடி ரூபாய் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிவாரணம் கேட்டும் மோடி அரசு இதுவரையில் நிவாரணம் வழங்குவதற்கு ஒரு ரூபாய்கூட நிதி வழங்காமல் இருப்பது தமிழர்களைப் பழிவாங்கும் செயல். இதில் மோடி பாரபட்சம் பார்க்கிறார். டெல்லியில் உட்கார்ந்துகொண்டு தமிழக அரசைக் குறை சொல்லும் வேலையை மட்டுமே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்து வருகிறார்.
2015 வெள்ளச் சேதம் இயற்கை இடர்பாடு அல்ல. முழுக்க முழுக்க மனித தவறுகளால் நடந்தது. 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆனால், தற்போது போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாநில அரசின் குறைகளை விமர்சிக்கும் பாஜக, அதிமுகவினர் மத்திய அரசை எதிர்த்து கேள்வி கேட்காமல், மௌனம் காப்பதாகக் குற்றம்சாட்டினார். திமுக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன் வைக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பல்வேறு மாநிலங்களில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளன. அந்த பாஜக அமைச்சர்கள் பற்றி விமர்சனம் செய்யாதது ஏன்? என கேள்வியெழுப்பினர்."
இதையும் படிங்க: தூத்துக்குடி வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!