மயிலாடுதுறை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உத்தரவிட்டார். மேலும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவது தெரிய வந்தால் அந்தந்த பகுதி காவல் நிலையங்களுக்கு ரகசியத் தகவல் அளிக்க வேண்டும் என்று பொதுமக்களைக் கேட்டுகொண்டார்.
இந்நிலையில் தரங்கம்பாடி வட்டம், செம்பனார்கோவில் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக வந்த ரகசியத் தகவலின் பேரில் காவல் துறையினர் கருவாழக்கரை பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவரை நிறுத்தி சோதனை செய்தபோது அரைகிலோ கஞ்சா வைத்திருப்பது தெரிய வந்தது.
உடனடியாக காவல் துறையினர் இளைஞரைக் கைது செய்து விசாரணை செய்ததில், அவர் மயிலாடுதுறை கிட்டப்பா பாலம் பகுதியைச் சேர்ந்த ராஜமாணிக்கம் என்பதும்; மயிலாடுதுறை, செம்பனார்கோவில் பகுதிகளில் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனத்தில் சென்று கஞ்சா விற்பனை செய்து வருவதும் தெரிய வந்தது.
உடனடியாக செம்பனார்கோவில் காவல் துறையினர் ராஜமாணிக்கம் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ஸ்டாலின் கடைசிவரை முதலமைச்சர் ஆக முடியாது- மு.க. அழகிரி