நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பல்வேறு தொகுதிகளில் அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நாகை நாடாளுமன்றத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுவதற்காக வேட்பு மனுவை தாக்கல் செய்ய, வேதாரண்யத்தைச் சேர்ந்த வேதரத்தினம் என்பவர் நாகை மாவட்டஆட்சியர் அலுவலகம் வந்தார்.
அப்போது, மயிலாடுதுறை தேர்தல் நடத்தும் அலுவலரும், நாகை மாவட்ட ஆட்சியருமான சுரேஷ்குமார் அவரிடமிருந்து வேட்பு மனுவை வாங்கி, அதில் கையெழுத்திட்டார்.
பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி, வேட்பாளரின் வேட்பு மனுவை வாங்கி பரிசீலித்த போது ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் காத்திருந்தது. இந்த வேட்பு மனுவை வேட்பாளர் திருவாரூரில் தாக்கல் செய்ய வேண்டும் என்பது தெரியவந்தது. இதையடுத்து மனு நிராகரிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய சுயேட்சை வேட்பாளர் வேதரத்தினம், "அதிகாரிகளிடம் முறையாக விசாரித்த பின்னரே வேட்புமனு தாக்கல் செய்ய வந்ததேன். ஆனால் வேட்பு மனுவை பரிசீலனை செய்யாமல் உறுதிமொழி ஏற்று, மனுவில் கையெழுத்திட்டு வாங்கிய பின் மனு நிராகரிக்கப்பட்டது தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது" என குற்றம்சாட்டினார்.
கடந்த மூன்று நாட்களாக வேட்புமனு தாக்கல் செய்ய நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஒரு வேட்பாளரும் வராத நிலையில், இன்று வந்த வேட்பாளரும் திரும்பி சென்ற சம்பவம் நகைச்சுவையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.