மயிலாடுதுறை நகராட்சியில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தில் 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை கழிவுகளை அகற்றும் தானியங்கி ரோபோடிக் இயந்திர திட்டம் முதன்முதலாக தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த ரோபோட்டிக் இயந்திரத்தை மயிலாடுதுறை எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நகராட்சி ஆணையர் சுப்பையாவிடம் ஓஎன்ஜிசி நிறுவனமும், ஜென் ரோபோடிக் இன்னோவேஷன் தொண்டு நிறுவனமும் ஒப்படைத்தது.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ரோபோடிக் இன்னோவேஷன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த தானியங்கி ரோபோடிக் இயந்திரம் ஆபத்தான விஷ வாயுக்களை கண்டறியும் வசதி, எளிய முறையில் இயக்கும் வசதி, குறைவான எடை, கேமரா வசதி மற்றும் தண்ணீர் உட்புகாத வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், பாதாள சாக்கடை குழாயில் உள்ள 3 ஆயிரத்து 406 ஆள்நுழைவு தொட்டிகளின் வழியாக 11 ஆயிரத்து 80 பாதாள சாக்கடை இணைப்புகளில் உள்ள அடைப்புகளை எளிதாக சரி செய்ய ஏதுவாக இருக்கும் என நிறுவனத்தினர் தெரிவித்தனர். தொடர்ந்து இயந்திர ரோபோட்டை பயன்படுத்தும் முறை குறித்து செயல் விளக்கத்துடன் நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
இதனால், 2013ஆம் ஆண்டு இந்திய அரசால் நடைமுறைப்படுத்தப்பட்ட மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றுவது தவறு எனும் சட்டம் மயிலாடுதுறை நகராட்சியில் நிறைவேற்றப்படும் என்று அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: விவசாயிகளுக்காக சாலைக்கு வந்த பள்ளி மாணவி!