மயிலாடுதுறை: தமிழ்நாட்டில் கரோனா தொற்றுப் பரவலானது வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் நேற்று (ஆக. 21) பல்வேறு தளர்வுகளை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதில் நாளை (ஆக.23) முதல் 50 விழுக்காடு பார்வையாளர்களுடன் திரையரங்குகளைத் திறக்கவும் அனுமதியளிக்கப்பட்டிருந்தது.
அப்போது ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி போடப்பட்டிருப்பதை திரையரங்க உரிமையாளர்கள் உறுதி செய்யவேண்டும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.
கரோனாவால் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், பெரும்பாலான திரையரங்கங்கள் சுகாதாரச் சீர்கேடு நிறைந்து காணப்படுகிறது.
முகக்கவசம் அணிந்தால் மட்டுமே அனுமதிச்சீட்டு
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளை தயார்படுத்தும் பணியில், தற்போது திரையரங்க ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அரசின் விதிமுறைப்படி பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைபிடித்து திரைப்படங்களைக் காண்பதற்கு ஏற்ப இருக்கைகள் தயார்படுத்தப்படுகின்றன.
தொடர்ந்து திரையரங்கில் உள்ள கழிவறைகள் உள்ளிட்ட இடங்களை கிருமிநாசினி சுத்தப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. திரையரங்கு வரும் பார்வையாளர்கள் அனைவருக்கும் கிருமி நாசினி வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் முகக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே அனுமதிச்சீட்டு வழங்கப்படும் என திரையரங்க நிர்வாகங்களின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசின் வழிகாட்டுதலை கடைபிடித்து ஒத்துழைப்பு வழங்கவும் திரையரங்க உரிமையாளர்கள், பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பல மாதங்கங்களுக்குப் பிறகு திரையரங்குகள் திறக்கப்படுவதால் சினிமா ரசிகர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: 'திரும்ப வந்துட்டேன்னு சொல்லு...' - நாளை திறப்பை ஒட்டி தயார்செய்யப்படும் திரையரங்குகள்