நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த முளப்பாக்கம் கிராமத்தில் கடந்த 15 ஆண்டுகளாக கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகிவருகின்றனர்.
மேலும் அப்பகுதியைச் சேர்ந்த அழகிரி என்பவர் தொடர்ந்து கள்ளச்சாராய விற்பனை செய்வதாக பல முறை பொதுமக்கள் காவல்துறை மற்றும் வருவாய்த்துறைக்கு புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்காத காவல்துறையினரை கண்டித்து முளப்பாக்கம் மெயின்ரோட்டில் திரண்ட இந்திய ஜனநாயக இளைஞர் சங்கத்தினர், விற்பனைக்காக சாக்குமூட்டையில் வைக்கப்பட்டிருந்த கள்ளச்சாராய பாக்கெட்டுகளை கைப்பற்றி சாலையில் போட்டு உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டுவருபவரை, காவல்துறை கைது செய்து நடவடிக்கை எடுக்காவிட்டால் மிகப்பெரிய அளவிலான போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அப்பகுதி பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.