நாகையை அடுத்த மேலவாஞ்சூரில் இந்தியன் வங்கிக் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் ஊழியர்கள் வழக்கம்போல் நேற்று (அக்.28) வங்கிப் பணிகளை முடித்துவிட்டு, வங்கியைப் பூட்டிவிட்டுச் சென்றனர். தொடர்ந்து ஊழியர்கள் இன்று (அக்.29) காலை வழக்கம்போல் வங்கியைத் திறந்து பார்த்தபோது பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
தொடர்ந்து, இது குறித்து நாகூர் காவல் நிலையத்திற்கு வங்கி ஊழியர்கள் தகவல் கொடுத்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், வங்கியின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வங்கியிலிருந்த கணினி மற்றும் உபகரணங்களை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. மேலும் காசாளர் அறையை அந்நபர் உடைக்க முயன்றதும், ஆனால் அறையை உடைக்க முடியாததால் கணினி மற்றும் உபகரணங்களை மட்டும் அவர் திருடிச் சென்றதும் தெரிய வந்தது.
இதனையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தக் கொள்ளையில் ஈடுபட்ட நபரை நாகூர் காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.