நாகை மாவட்டம் சீர்காழி அருகே ஆரப்பாக்கம் கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான இடத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சார்பில், திடீரென புதிதாக அம்பேத்கர் சிலை வைக்கப்பட்டது.
அச்சிலையை இன்று திறந்துவைக்க ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் நீதிமன்ற உத்தரவை மீறி, அரசுக்குச் சொந்தமான இடத்தில் சிலையை வைத்தது தவறு என்று வருவாய்த் துறை பலமுறை அறிவித்தும், அதனை ஏற்காமல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் விழா ஏற்பாடுகளைச் செய்தனர்.
இந்த நிலையில் தற்போது வருவாய்த் துறையினர் சிலை திறக்க அனுமதி மறுத்தனர். இதனால் அவ்விடத்தில் சற்று பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்புக்காக கூடுதல் காவல் கண்காணிப்பாளர், 3 காவல் துணை கண்காணிப்பாளர்கள் தலைமையிலான 200-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் அங்கு குவிக்கப்பட்டனர்.
நீதிமன்ற உத்தரவு அமலில் உள்ளதால் சிலையை உடனே அகற்றக்கோரி சீர்காழி வட்டாட்சியர் சாந்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
அப்பேச்சுவார்த்தையின் முடிவில் தாங்கள் வைத்த சிலையை தாங்களே அகற்றிவிடுவதாகக் கூறி, அவர்களே சிலையை நள்ளிரவு 2 மணியளவில் இடித்து எடுத்துச் சென்றனர். இதையடுத்து சுமார் 8 மணி நேரம் நீடித்த பதற்றம் குறைந்தது.
இதையும் படிங்க: புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுக்கான கண்காட்சி: ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள்!