நாகை மாவட்டம் மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி வருடாந்திர கணக்கு முடிக்கும் பணிகளில் மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்று பாதித்தவர்கள் 180 பேர் சிகிச்சைப் பெற்றுவருவதால் அரசு மருத்துவமனை புதிய கட்டட வளாகம் நிரம்பிவழிகிறது.
மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் தொற்று குறித்த சோதனை முடிவிற்கு காத்திருக்கின்றனர். அதுமட்டுமின்றி, கரோனா தொற்று அறிகுறியுள்ளவர்கள் தனிமைப்படுத்தலில் பல்வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
சென்னையிலிருந்து வருபவர்களது எண்ணிக்கை குறைந்துள்ளதால் மேலும் நோயாளிகளின் வருகை குறைவாக இருக்கும். இருந்தாலும் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து வருபவர்களிடமிருந்து கரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளதால் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்கான இடம் நிரம்பிவிட்டது.
இதனால் இந்த நோயாளிகளை மூன்று வகைகளாகப் பிரித்து வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான இடம் தேர்வு நடைபெற்றுவருகிறது. இடமாற்றம் செய்யப்பட்டு அங்கு அலோபதி, சித்தா மருந்துகள் அளிக்கப்பட்டு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க சிகிச்சை அளிக்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க...சாத்தான்குளம் விவகாரம்: முதலமைச்சருக்கு ஸ்டாலின் கேள்வி!